இந்துத்துவ வலதுசாரி கருத்தியல், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து, இந்தியாவின் சமூக அரசியல் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்திவருவதை அறிவோம். அதன் அரசியல்ரீதியான வளர்ச்சியை விவரிக்கும் சிறுநூல், ‘விளிம்பிலிருந்து மையத்திற்கு – நூற்றாண்டு கால ஆர்.எஸ்.எஸ். உள்ளும் புறமும்’.
ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட இந்திய அளவிலான அமைப்புகளையும், சமூகத்தின் அனைத்துப் பரிணாமங்களுக்கும் ஒரு துணை அமைப்பினையும் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். குறித்து, ஃப்ரன்ட்லைன்’ ஆங்கில இதழ் 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு சிறப்பிதழ் கொண்டுவந்தது. அந்த அமைப்பின் வரலாற்றையும் நடைமுறைகளையும் பல்வேறு கோணங்களில் விளக்கும் கட்டுரைகள் அதில் இடம்பெற்றன. அந்தக் கட்டுரைகளை மொழிபெயர்த்து, உரிய அனுமதியையும் பெற்று, சிறுநூலாக வெளியிட்டுள்ளது, பாரதி புத்தகாலயம்.
இந்தியாவின் மூன்று உள்நாட்டு அச்சுறுத்தல்கள் என முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளை அடையாளப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ், அதை நடைமுறைப்படுத்தும் காலத்தில் வந்து நிற்கிறது. ‘கலாச்சாரப் பெருமை’, ‘பெரும்பான்மை வாதம்’ ஆகிய இரட்டை முகமூடிகளைப் பயன்படுத்தி, அரசியல் அதிகாரத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டமிட்ட பயணத்தை, இந்தச் சிறுநூலில் வாசிக்கலாம்.
ஆனால், ‘இந்தியா இன்னும் ஒரு இந்துராஷ்டிரமாக மாறிவிடவில்லை. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இன்னும் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைக் கொண்ட சிறுபான்மையினராகவே இருக்கிறார்கள். மதச்சார்பின்மை, முற்போக்குவாதம், கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றின் ஆன்மா இன்னும் வலிமையாகவே உள்ளது’ என இந்த நூலுக்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார், ‘ஃப்ரன்ட்லைன்’ ஆசிரியர் வைஷ்ணா ராய்.
நூல்: ‘விளிம்பிலிருந்து மையத்திற்கு – நூற்றாண்டு கால ஆர்.எஸ்.எஸ். உள்ளும் புறமும்’
விலை: ரூ.80.
தொடர்புக்கு: 94445-67935
நன்றி: முரசொலி நாளிதழ்
நூலைப் பெற: https://thamizhbooks.com/

Add comment