தமிழக முற்போக்குக் கலை இலக்கிய முகாமில், ஒரு பெரும் படையையே உருவாக்கியவர் ‘எஸ்.ஏ.பி’ என்று அழைக்கப்படும் எஸ்.ஏ.பெருமாள். இவருடன் நீண்டகாலம் நெருங்கிப் பழகிய அரசியல் ஆளுமைகள், இவரால் உருவாக்கப்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள் இணைந்து எழுதியிருக்கும் சுட்டுரைகளின் தொகுப்புதான், “மார்க்சிய ஆசான் தோழர் SAP” என்ற இந்த நூல் ஒரு கம்யூனிஸ்ட் எப்படி உருவாகிறார், மக்களை எப்படி அணுகுகிறார். அவர் உருவாக்கும் சமூகத் தாக்கம் என்ன என்பதை இந்த நூல் கண்முன் சாட்சியாக நிறுவுகிறது.
‘எஸ்.ஏ.பி பொதுவுடைமைத் தலைவர் ப.ஜீவானந்தத்தின் பேச்சைக் கேட்டு வளர்த்தவர். சிறு வயதிலேயே மக்கள் பிரசனைகளுக்காகக் களத்தில் இறங்கிப் போராடியவர்’ என்கிறார் நூலின் தொகுப்பாசிரியரான எம்.ஜே.பிரபாகர்.
விருதுநகர் மாவட்டத்தில் தொழில் பிரசனைகள், பட்டாசுத் தொழிலாளர்களின் போராட்டம், விவசாயிகளின் பிரச்னைகள் எனக் களப்பணிகளில் தனித்துவத்துடன் செயல்படும் அதேநேரத்தில், இலக்கிய தனத்திலும் தீவிரமாகச் செயல்படுபவர் எஸ்.ஏ.பி என்று குறிப்பிடுகிறார் முன்னால் அமைச்சர் தங்கம் தென்னரசு.
என்னைச் செதுக்கிய தலைவர்களில் ஒருவர்” என்று எஸ்.ஏ.பி-யைக் குறிப்பிடும் சி.பி.எம் மாநில செயலாளர் பெ.சண்முகம், ‘கடந்த 45 ஆண்டுகளாக ஒரு பள்ளி ஆசிரியரைப்போல மார்க்சியத் தத்துவத்தைப் பயிற்றுவித்துக்கொண்டிருப்பவர். இவரிடம் பாடம் படித்தவர்கள் பல்வேறு துறைகளில் உயர்ந்த இடத்துக்குச் சென்றிருக்கிறார்கள். ஆகவே, இவரை ‘ஆசான்’ என்று குறிப்பிடுவது சாலப்பொருத்தம்’ என்கிறார். – கே.ஏ.குணசேகரன், கரிசல் (கிருஷ்ணசாமி கொல்லங்குடி கருப்பாயி, ஓம் முத்துமாரி, கோட்டைச்சாமி உட்பட புகழ்பெற்ற மக்கள் பாடகர்களையும், சாகித்ய அகாடமி விருதுபெற்ற மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட பல எழுத்தாளர்களையும் கண்டறிந்து, முற்போக்கு மேடைகளில் அறிமுகப்படுத்தினார்’ என்று சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.
பன்முகத் திறன் கொண்ட ஆளுமையாக விளங்கிய எஸ்.ஏ.பி. ‘செம்மலர் இதழின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். ‘மனிதகுல வரலாறு கடவுள் பிறந்த கதை’, ‘தத்துவங்களின் தேரோட்டம் உட்பட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அவரோடு இணைந்து பயணித்த தலைவர்களாலும், நண்பர்களாலும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவாக அமைந்திருப்பது இந்த நூலின் சிறப்பு
நால்: மார்க்சிய ஆசான் தோழர் SAP
தொகுப்பாசிரியர்: M.J.பிரபாகர்
வெளியீடு: ரெட் ஸ்டார் பப்ளிகேஷன்ஸ்
502, ரிவர்டேல் அபார்ட்மென்ட்ஸ், 4-வது பிரதான சாலை விரிவாக்கம்,
கோட்டூர் கார்டன்ஸ், கோட்டூர்புரம், சென்னை 600 085, பக்கங்கள் 527, விலை ரூ.600
தொடர்பு எண் : 9444567935 / 044-24332924
புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/
நன்றி: விகடன் படிப்பறை

Add comment