சாமான்யப் பெண்களின் சொல்லப்படாத மனக்குமுறல்! – டயானா சுரேஷ்
இதுவரை எழுதப்படாத, நம் அன்றாட வாழ்க்கையில் மிக எளிதாகக் கடந்து சென்ற சாமானிய மனிதர்களின் வலிகளை இந்தச் சமூகத்திற்குக் கடத்தும் காத்திரமான எழுத்தாளர் டாக்டர் மந்திரி குமார். ‘ஆதியில் பிறந்தவர்கள்’, ‘பேசும் காய்ச்சக்கார அம்மன்’, ‘தாய்ப்பால் எனும் ஜீவநதி’ போன்ற நூல்களின் வரிசையில், பாரதி புத்தகாலய வெளியீடாக வந்துள்ள இவரது “பேபி ப்ளூஸ்” புத்தகமும் சமூகம் இதுவரை திரும்பிப் பார்க்காத, செவிசாய்க்காத ஒரு முக்கியப் பிரச்சினையை அறிவியல் பூர்வமாகப் பேசுகிறது.
குழந்தையைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு என்று நினைத்துப் படித்தால், இது ஒரு குழந்தையைப் பெற்ற தாயின் மனக்குமுறல்களைப் பேசும் புத்தகமாக நம்மை உலுக்குகிறது. ‘அக்சயா’ என்ற பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து, அவரின் அனுபவங்களை உள்வாங்கி, ஒரு மருத்துவராக இந்தச் சமூகத்திற்கு என்ன கூற வேண்டும் என்பதை இதில் எளிய நடையில் தொகுத்துள்ளார் ஆசிரியர்.
பிரசவத்திற்குப் பிறகு உடல் மற்றும் மன ரீதியாகப் பலவீனமடையும் ஒரு பெண்ணை, அவளைச் சுற்றியுள்ள உறவினர்கள் எவ்வளவு கவனமாகக் கையாள வேண்டும் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. “தாய்மை என்பது பெண்ணுக்கு மட்டுமா?” என்ற எழுத்தாளரின் கேள்வி அபாரமானது. தாய்மை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு விஷயம்; குழந்தை வளர்ப்பில் இருவருக்குமே சரிபாதி பொறுப்புகள் உள்ளன என்ற முற்போக்குச் சிந்தனையை இப்புத்தகம் விதைக்கிறது.
கர்ப்ப காலத்தில் மகாராணியாகக் கவனிக்கப்படும் ஒரு பெண், குழந்தை பிறந்த உடனே ‘அதைச் சாப்பிடாதே, இதைச் செய்யாதே’ என்று உறவினர்களின் அடுக்கடுக்கான விதிகளுக்குள் சிறைபிடிக்கப்படுகிறாள். தாய் மன நிம்மதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்தால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும் என்ற எளிய உண்மையைச் சமூகம் மறுப்பதைக் கேள்விகேட்கிறார் ஆசிரியர்.
குழந்தையைப் பார்க்க வரும் உறவினர்கள் ‘குழந்தை ஏன் அழுதுகொண்டே இருக்கிறது? பால் பத்தவில்லையா?’ என்று அட்வைஸ்களை அள்ளி வீசி, அந்தத் தாயைப் பயந்த நிலைக்கு ஆளாக்குகிறார்கள். “நாங்கள் எல்லாம் அந்தக் காலத்தில் பெற்றோம்” என்று பேசும் படித்த, படிக்காத மனிதர்களின் போலிப் பெருமைகளை இந்நூல் தோலுரிக்கிறது. இனிவரும் காலங்களில் வளைகாப்பு நிகழ்வுகளில் எதை எதையோ கிப்ட்டாகக் கொடுப்பதற்குப் பதிலாக, இந்த ‘பேபி ப்ளூஸ்’ புத்தகத்தைப் பரிசளித்தால் அது சமூகத்திற்குச் செய்யும் ஆகச்சிறந்த நன்மையாக இருக்கும்.
பேபி ப்ளூஸ் (Baby Blues)
ஆசிரியர்: டாக்டர் மந்திரி குமார்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் /
விலை: ₹40/-
புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/

Add comment