பிரபஞ்சத்தைப் பற்றிய பார்வையும் உழைக்கும் மக்களின் தத்துவப் போராட்டமும்! – எஸ். பாலா
தமிழ் அறிவுச் சூழலில் மார்க்சிய ஆய்வாளர் அருணனின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவரது நீண்ட நெடிய எழுத்துலக அனுபவமும், ஆழ்ந்த தத்துவச் செறிவும் கொண்டு, வாசகர்கள் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் வெளிவந்துள்ளது ‘தத்துவ ஞானம்’ என்னும் நூல்.
தத்துவம் என்றாலே புரியாத புதிர் என்று நினைக்கும் மாய வலைகளை அறுத்து, வெறும் பத்து சொற்களின் வழியே எளிய தத்துவ ஞானப் பார்வையை இந்நூலில் அவர் உருவாக்கித் தருகிறார். கிரேக்க மொழியில் ‘ஃபிலாசபி’ (Philosophy) என்றால் அறிவை நேசிப்பது என்று பொருள். இந்தியத் துணைக் கண்டத்தில் இதற்கு ‘தரிசனம்’ என்ற சொல் உள்ளதையும், பழந்தமிழ் காப்பியமான நீலகேசியில் ‘தத்துவாசிரி’ என்ற சொல் புழங்கியதையும் சுட்டிக்காட்டும் ஆசிரியர், “பிரபஞ்சத்தைப் பற்றிய பார்வையே தத்துவம்” என்கிறார்.
பிரபஞ்சத்தில் கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் ஆகிய இரு வேறு தத்துவப் பிரிவுகளே உள்ளன; இதில் நடுநிலை என்று ஒன்றுமே இல்லை என்பதை நூல் மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது. பிரபஞ்சம், இயக்கம், வளர்ச்சி, விதிகள், உணர்வு, கடவுள், மனிதன், ஞானம், களம் உள்ளிட்ட பத்து சொற்களைக் கொண்டு ஒட்டுமொத்த மனித சமூக வரலாற்றையும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்துகிறது இந்நூல்.
குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம் என்ன? பிரபஞ்சமும் உயிரினங்களும் தோன்றியது எப்படி? இயக்கவியலின் விதிகள் யாவை? போன்ற சிந்தனைக்குரிய கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமான பதில்களை நூல் வழங்குகிறது. மேலும், இயக்க மறுப்பி யல் வாதங்களை நிராகரித்து, இயக்கவியல் பொருள் முதல் வாதத்தின் வழியே தத்துவத்தை இந்நூல் முழுமையடையச் செய்கிறது.
தத்துவப் போராட்ட த்திற்காக உயிர் பலியான சாக்ரடீஸ், புரூனோ ஆகியோரின் தியாக வரலாறு தொடங்கி ஸ்பினோசா, நாடுகடத்தப்பட்ட காரல் மார்க்ஸ் மற்றும் நம் ஊர் சித்தர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகள் வரை அனைத்தையும் நூல் அரிய முறையில் எடுத்து இயம்புகிறது. “தத்துவம் மக்களைக் கவ்விப் பிடிக்கும்போது அதுவொரு பௌதீக சக்தியாக மாறிவிடுகிறது” என்ற மார்க்ஸின் கூற்றுப்படி, மதத்தின் ஆணிவேரை அசைக்கவும், உழைக்கும் மக்களைத் தத்துவமயமாக்கவும் எளிய மொழியில் எழுதப்பட்ட இந்நூல் ஒரு காத்திரமான தத்துவாயுதமாகும்.
தத்துவ ஞானம்
ஆசிரியர்: அருணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 144
விலை: ₹130
தொடர்புக்கு: 9444960935
புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/

Add comment