ஆங்கிலத்தில் SCIENCE IN HISTORY (வரலாற்றில் அறிவியல்) என்ற தலைப்பில் 1954ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஜே.டி.பெர்னால் ஒரு புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் அறிவியலின் வளர்ச்சியையும் அதன் முக்கிய கண்டுபிடிப்புகளையும் வரலாற்றுப் பின்னணியுடன் விளக்குகிறது. பழங்காலம் முதல் நவீன காலம் வரை பல்வேறு விஞ்ஞானிகளின் பங்களிப்புகளையும் தத்துவாதிகளின் போதாமைகளையும் எடுத்துக்காட்டுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித வாழ்க்கையிலும் சமூக முன்னேற்றத்திலும் ஏற்படுத்திய மாற்றங்களை பகுப்பாய்வு செய்கிறது. அறிவு, ஆராய்ச்சி மற்றும் சிந்தனை ஆகியவை மனித நாகரிக வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. அதே நேரத்தில் அறிவியலுக்கும் ஒரு வர்க்க குணாம்சம் உண்டு, ஆளும் வர்க்கங்களின் நலன்களை பாதுக்காகவே பயன்பட்டு வருகிறது என்பதை மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்தவர் பெர்னால்.
பெர்னால் எழுதிய வரலாற்றில் அறிவியல் புத்தகத்தை முன்வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் வெளியீடு உபகுழுவும் பாரதி புத்தகாலயமும் இணைந்து 16-8-26 ஞாயிறு காலை 9மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூ ஐ.ஏ.எஸ்.அகாடமியில் நூல் ஆய்வரங்கம் நடத்தினார்கள். இந்நிகழ்வு மூன்று அமர்வுகளாக நடத்தப்பட்டது. நிகழ்வு துவங்குவதற்கு முன் சமீபத்தில் மறைந்த மக்கள் அறிவியல் இயக்கத்தின் முன்னோடி எம்.பி.பரமேஸ்வரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. எம்.பி.பரமேஸ்வரன் பற்றிய தகவல்களையும் அவருடன் பணியாற்றிய அனுபவங்களையும் விஞ்ஞானி. த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் பகிர்ந்துகொண்டார். அதற்கு பின் நூல் ஆய்வரங்கம் துவங்கப்பட்டது

முதல் அமர்வு
முதல் அமர்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் முனைவர் திருநாவுக்கரசு தலைமையேற்று நடத்தினார். அறிவியல் வெளியீடு மாநில ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் வரவேற்புரையாற்றினார். பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர் என்.குணசேகரன் துவக்வுரையாற்றினார். பெர்னலின் சிந்தனைக்கு தூண்டுகோலாக இருந்தது மார்க்சும்-ஏங்கல்ஸூம் என்றார். வின்வெளி ஆராய்ச்சிகள் அவசியம் தான் ஆனால் அதே நேரத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்களை மீட்க கூடுதல் நிதிகளை ஒதுக்கி அரசு ஆய்வுகளை செய்ய வேண்டும் என்றார். அறிவியல் சாதரான உழைக்கும் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று பேசினார்
பிறகு பெர்னலின் சிந்தனைக்கு அடித்தளம் அமைத்தது எது? என்ற தலைப்பில் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கருத்துரை வழங்கினார் ஜே.டி.பெர்னால் வரலாற்றில் அறிவியல் புத்தகத்தை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்த அறிவியல் மாநாட்டில் சோவியத் அறிஞர்கள் நியூட்டன் குறித்து முன்வைத்த விமர்சனங்கள் முக்கிய காரணம் என்று விளக்கி பேசினார். பெர்னாலின் சிந்தனை மாற்றத்தின் துவக்க நிலையையும் அவரின் மார்க்சிய நோக்கிலான எழுத்துக்களும் இன்றும் அனைவருக்கும் உற்சாகம் தரக்கூடியதாக உள்ளது. ஆனால் அவரின் இந்த இடதுசாரி அரசியல் சார்பு 7 முறை நோபல் பரிசுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டும் அவரது பெயர் நிராகரிக்கப்பட்டது என்று கூறினார். பிறகு 15 நிமிடம் கேள்வி பதில் நிகழ்வு நடைபெற்றது .

இரண்டாவது அமர்வு
இரண்டாவது அமர்விற்கு தென் சென்னை அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் எஸ்.விஜயன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஜே.டி.பெர்னாலின் எழுத்துக்கள் தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்ய வேண்டும் என்றும். இந்த கூட்டத்தில் பங்குபெற்றவர்கள் அதற்கு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பிறகு பெர்னலின் இன்றைய முக்கியத்துவம் பற்றிய தலைப்பில் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இயற்பியல் துறை பேராசிரியர். வி.முருகன் வரலாற்றில் அறிவியல் புத்தகத்தின் சாராம்சத்தை விளக்கி பேசினார். எந்த ஒரு விஞ்ஞானியும், மற்றும்அ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் தனித்து இயங்கவில்லை ஆளும் வர்க்கங்களின் ஒத்துழைப்போடும் கட்டுப்பாடுகளோடும் தான் இயங்குகிறது என்றார், இந்திய முதலாளித்துவம் பிற ஐரோப்பிய முதலாளித்துவதோடு வேறுபட்டது என்றார். ஐரோப்பாவில் அறிவியல் ஆய்வுகளுக்கு முதலீடு செய்வது அதிகரித்துள்ளது ஆனால் இந்தியாவில் உள்ள முதலாளிகள் போதுமன நிதியை அறிவியல் ஆய்வுகளுக்கு ஒதுக்க முன்வரவில்லை. அதனோடு ஜாதிய பாகுபாடுகள் அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு தடையாக உள்ளதாக தெரிவித்தார். இந்த அமர்வின் நிறைவாக வரலாற்றில் அறிவியல் புத்தகம் தொடர்பாக பேராசிரியர் ஹேமபிரபா ஜோசப் பிரபாகர், ஸ்ரீதர், கமலேஷ், தீபிகா உள்ளிட்ட சில நண்பர்கள் முருகன் அவர்களின் வரலாற்றில் அறிவியல் புத்தகத்தை பாராட்டி பேசினர்.

மூன்றாவது அமர்வு
மூன்றாவது அமர்விற்கு முனைவர்.கிருபாநந்தினி தலைமை தாங்கினார். அறிவியல் வளர்ச்சி மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை கூட்டியுள்ளது என்றும் பொதுபுத்தியில் அந்தக்காலத்தில் தான் மனிதர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள் என்ற உண்மைக்கு மாறான தகவல்களும் பரவியுள்ளது அதுபோல் பரவியுள்ள பல பொய்களை அறிவியல் சிந்தனையோடு நாம் களைய வேண்டும் என்று பேசினார் ஜே.டி.பெர்னால் புதிய சிந்தைகளின் சிற்பி என்ற தலைப்பில் கிருஷ்ணசாமி பேசும்போது. ஜே.டி.பெர்னால் எக்ஸ்-ரே வழியாக கண்டுபிடித்த புரத மூலக்கூறுகளின் வடிவமைப்பை பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார். மேலும் ஜே.டி.பெர்னாலின் உதவியோடு 5 பேர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு பேசினார். அவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கு 5 காரணங்களை பட்டியலிட்டார். ஒரு சிறப்பானதொரு பவர்பாயின்ட் பயன்படுத்தி சிக்கலான அறிவியல் விளக்கங்களை எளிமையாக விளக்கினார்.
இந்நிகழ்வின் போது. விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய தலையில் உதிக்கிறாத அறிவியல் ? என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும் பேராசிரியர் முருகன் எழுதிய வரலாற்று அறிவியல் புத்தகத்தின் மூன்றாம் பதிப்பும் வெளியிடப்பட்டது. இறுதியாக இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மாநில செயலாளர் தீனத்யாளன் நன்றியுரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணி பாரதி, புத்தகாலயம் பொறுப்பாளர் நாகராஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் சுதாகர், அம்பிகா, மோசஸ் பிரபு, கிருஸ்துதாஸ், குமார், ஸ்ரீதர், ரவி, செல்வராஜ், உள்ளிட்ட நண்பர்களும் 13 மாவட்டங்களிலிருந்து சுமார் 60 பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
குறிப்பு:
இந்நிகழ்வு நடைபெற திருவள்ளூர் மாவட்ட தலைவர் B.ஜெயநாராயணா அவர்கள் இடம் மற்றும் இரண்டு வேளை தேநீர் அன்பளிப்பாக வழங்கினார். உணவு செலவீனங்களை செங்கல்பட்டு. வடசென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் அறிவியல் இயக்க நண்பர்கள் உதவியோடு செய்யப்பட்டது.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

Add comment