சமூக வலைதள அல்காரிதத்தை புரிந்துகொண்டு வலுவாக செயலாற்றுவோம்
சென்னை, ஆக. 20 – சமூக வலைதள அல்காரிதத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு, ஆளும்வர்க்கத்தின் ஒடுக்குமுறைகளை மீறி வலுவாகச் செயலாற்றுவோம் என்று ‘அரசியலும் அல்காரிதமும்’ நூல் வெளியீட்டு விழாவில் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘அரசியலும் அல்காரிதமும்’ நூல் வெளியீட்டு விழா வியாழனன்று (ஆக.20) சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநிலக்குழு உறுப்பினர் ஆர். சுதிர் ஒருங்கிணைப்புச் செய்தார்.
இந்நூலின் முதல் பிரதியைச் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட, டயலாக் தமிழ் கே.பி. லெனின் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் பேசிய பெ. சண்முகம், “சமூக வலைதளம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி கற்பனைக்கெட்டாத வகையில் வளர்ந்து வருகிறது. தொழில் நுட்பங்களை ஆர்வத்தோடு கற்க வேண்டும். சமூக வலைதளத்தைப் புரிந்து கொண்டு அவற்றை எவ்வாறு ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த வழிகாட்டியாக இந்நூல் இருக்கும்” என்றார்.
ஆளும் வர்க்கத்தின் ஆன்லைன் கட்டுப்பாடுகளும் எதிர்ப்பும் நிகழ்விற்குத் தலைமை தாங்கிய மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் பேசுகையில், “உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களை ஆளும் வர்க்கத்தின் ஆளுகைக்கு உட்படுத்தும் பொறுப்பை சமூக ஊடகங்கள் செய்து வந்தன. தற்போது 5ஆம் தலைமுறை தொழில் வளர்ச்சி டிஜிட்டல் மயம் மற்றும் ரோபோட் மயத்தை உருவாக்கியுள்ளது. இந்த வளர்ச்சிபோக்கு ஊடகம் மற்றும் செய்தித்துறையிலும் ஏற்பட்டுள்ளது. எல்லா காலத்திலும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கருத்தை ஒடுக்கப்பட்ட வர்க்கம் எழுப்பி வந்துள்ளது.
ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எதிர்ப்பு பிரச்சாரத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதை அல்காரிதம் மூலம் மேற்கொள்கின்றனர். எவ்வளவுதான் இத்தகைய எதிர்ப்புக்கருத்துக்களைக் கட்டுப்படுத்த முயற்சித்தாலும், அதையெல்லாம் மீறி மக்கள் இயக்கங்களின் குரலை ஒலிக்கச்செய்து செயலாற்ற இந்நூல் பெரிதும் உதவும்” என்று தெரிவித்தார்.
நன்றி: தீக்கதிர் நாளிதழ்
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

Add comment