Description
அவனது பரிணாமம் என்பது இருளில் நடந்தது. அவனது பயணத்தின் தடயங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. சாத்தானின் பிரவேசம் என்பது இப்படித்தன் இருக்கும் போலும்.அவன் பெயர் நாதுராம் கோட்சே! அவரது வாழ்வு என்பது ஒளி நிறைந்தது. அவரிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அவர் எடுத்து வைதத ஒவ்வொரு அடியையும் உலகமே அறிந்திருந்தது. அவர்தான் தேசப்பிதா காந்தி மகான்.
ஒரு திரைப்படத்தின் இணைக் காட்சி பாணியில் விறுவிறுப்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லப்படும் வரலாறு இப்பக்கங்களில் விரிகிறது. காந்தியும் கோட்சேயும் தனி நபர்கள் அல்லர். வெவ்வேறான எதிரெதிரான இரு கருத்துக்களின் தத்துவங்களின் பிரதிநிதிகள். கோட்சேயைக் கொலைகாரனாக மாற்றிய இந்துத்துவ தத்துவம் இந்திய வரலாற்றில் இயங்கிய வரலாறும் கோட்சே அதன் பிடியில் சிக்கி வளர்ந்த கதையும் ஆதாரங்களுடன் சொல்லப்படுகிறது. மதச்சார்பற்ற அரசியலுக்கு வித்திட்ட மகாத்மா இந்துத்துவத்தை எதிர்கொண்ட தருணங்களும் விதமும் கூர்மையாக விளக்கப்பட்டுள்ள புத்தகம். காந்தி கொலையுண்ட நிகழ்வும் அதற்கு முன்னர் அவரைக் கொலை செய்ய நடந்த முயற்சிகளும் ஒரு மௌனப்படம் போல நம் முன்னே காட்சிபூர்வமாக நகர்கின்றன. காந்தி கொலைக்குப் பிறகு நாட்டில் நடந்த நிகழ்வுகளும் சமீப காலங்களில் வெறி கொண்டு எழுந்து நிற்கும் இந்துத்வா சக்திகள் கோட்சேயை தியாகியாகக் காட்ட எடுக்கும் முயற்சிகளும் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றன. காந்தி பிறந்த குஜராத் மண்ணில் ரத்த ஆறு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் 1947 ஆகஸ்ட் 15 அன்று காந்தி நின்ற இடமான கல்கத்தா அமைதிப்-பூங்காவாக மணக்கிறது ஹக்ளி நதி அமைதியாப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதில் பொதிந்துள்ள உண்மையை அடையாளம் கண்டு காந்தி நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார்.
Reviews
There are no reviews yet.