Description
இன்றைய தீக்கதிரில் எனது வனபுத்திரி நாவலுக்கு தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம் எழுதியுள்ள விமர்சனம்.தீக்கதிருக்கும்,தோழர்.சு.பொ.அகத்தியலிங்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றி!சீதையும் வால்மீகியும் சந்தித்துக் கொண்ட போது புராணக் கதாபாத்திரங்களை மறுவாசிப்பு செய்து சிறுகதைகள் படைத்து நம் நெஞ்சைக் கொள்ளை கொண்டு வந்த சுப்பாராவின் முதல் நாவல் இது.அவர் தன்பாணியில் சற்றும் விலகாமல் இந்நாவலையும் படைத்துள்ளார்.பாராட்டுகள்.புராண பாத்திரங்களை பெண்ணிய நோக்கில்,தலித்திய நோக்கில்என பல கோணங்களில் மறுவாசிப்புச் செய்யும் போது புதிய வெளிச்சம் கிடைக்கும்;கட்டியமைக்கப்பட்ட புனிதம் நொறுங்கும்.இராமாயணம் படைத்த வால்மீகியும் இராமாயணக் கதாநாயகியும் சந்தித்தால் என்கிற ஒற்றை வரியில்கதையின் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது.வெறுமே கற்பனைச் சரடுகளைஅவிழ்த்துவிடாமல் இராமாயணத்தைக் கூர்ந்து படித்து உள்வாங்கி நுட்பமாய் சில இடைவெளிகளை இட்டு நிரப்பி இராமாயணத்தின் சாதிய,ஆணாதிக்கக் கூறுகளை படம் பிடிக்கிறார்.இராமனால் துரத்தப்பட்ட சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி குழந்தை பெற காத்திருக்கிறார்.இராமகாதையை அரங்கேற்றி நிஷாதகுலத்தில் பிறந்த தான் பிரம்மரிஷி எனப் புகழ்பெற வேண்டும் என்றஅடங்கா வேட்கையுடன் வால்மீகிஇராமகாதையின் ஒவ்வொரு பாத்திரமாக தேடி பேட்டி கண்டுவிவரம் சேகரித்து எழுதிக்கொண்டிருக்கிறார்.ராமனைப் பேட்டிகாணச் சென்ற வால்மீகியின் அனுபவம் எப்படி இருந்தது? “அயோத்தியில் பத்துநாட்களுக்கு மேல் காத்திருந்தும் சக்கரவர்த்தியின் பேட்டி கிடைக்கவில்லை …….ரிஷிகளுக்குள்ளும் வர்ணம் பார்க்கிறார்களே!என் மகத்தான கவிதைகளைப் படிக்கும் வரை என்னை நிஷாதனாகத்தானே பார்ப்பார்கள்….”என சுப்பாராவ் எழுதிச் செல்லும் போது சமூகவிமர்சனம் சாட்டையாய் விழுகிறது.“கதாநாயகனைப் பார்க்க பத்துநாள் காத்திருந்த உங்களுக்கு கதாநாயகியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லையே?”என நெத்தியடியாய் சீதை கேட்கும் கேள்வி பெண்சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாய் ஒலிக்கிறது.ராமாயணத்தில் சீதையின் தாயார் பெயர் ஏன் விடுபட்டது;வளர்ப்புத் தாய் பெயர் ஏன் விடுபட்டது;லட்சுமணனின் தாயார் சுமித்திரையின் பரம்பரை ஏன் சொல்லப்படவில்லை.;இப்படி எழும் ஒவ்வொரு கேள்வியும் மநுவின் முகத்திரையை விலக்கி கோர உருவத்தைக் காட்டுகிறது.அனுமன் இலங்கையில் சீதையை சந்தித்ததை விவரிக்கும் வால்மீகி ஏன் அனுமன் வாயால் சீதையின் பேரழகை விவரிக்கிறார்?கட்டைப் பிரமச்சாரிக்கு ஏன் இந்த வேலை?வாலிவதை குறித்த உரையாடல் இன்னொரு முனையைக் காட்டுகிறது.விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் நடந்த போது;இராவணனின் மனைவியை கட்டாயப்படுத்தி விபீஷணனின் பட்டத்து ராணியாய் வலம் வரச் செய்யும் இடம்;பெண்களின் வலியை,ரணத்தைஉணராத ஆணாதிக்க முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும்.இப்படி புராண கதாபாத்திரங்களூடே உள் நுழைந்து புதிய சேதிகளை அள்ளிக் கொண்டுவரும் நுட்பம் சுப்பாராவுக்கு மிகவும் கைவரப் பெற்றிருக்கிறது என்பதற்கு இந்நூல் நெடுக நிறைய சாட்சிகள் உண்டு.நூலின் கிளைமாக்ஸ்தான் சூப்பர்.ராவணனின் மனைவி மண்டோதரியை அங்கதன் தூக்கிக் கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை புரிகிறான்.இராவணன் தேடிச் சென்று மீட்டு வருகிறான்.ஊரார் அவளை அங்கேயே கொன்றுஎறிந்திருக்க வேண்டும் என தூற்றுகின்றனர்.இராவணன் அவளை ஏற்றுக் கொள்கிறான்.ஆனால் அயோத்தியில் இராமன் என்ன செய்தான்?தீக்குளிக்கச் சொன்னான்.இந்த இரண்டையும் ஒப்பிட்டு சீதை அசை போடுவது நெற்றியடியாகும்.சீதையின் எந்தத் திருத்தமும் வால்மீகியால் ஏற்கப்படவில்லை.நாரதர் தலையிட்டு திருத்தங்களை தீக்கிரையாக்கச் செய்துவிட்டார்.அதன் சாம்பல் துகள்களிலிருந்து இந்த நாவல் கிளைத்திருக்கிறது.இராமனை தேசிய கதாநாயகனாகக் காட்டி மதவெறி தூபம் போடும் இன்றையச் சூழலில் இந்தநாவல் அந்த புனிதப் பூச்சை அழித்துத் துடைக்கிறது.இது இன்றையத் தேவை.ராஜம் கிருஷ்ணன் எழுதிய,இராமாயணம் குறித்த இரண்டு மறுவாசிப்பு நூல்களும்;அதுபோன்ற வேறு பல நாவல்களும் சிறுகதைகளும் இப்போது மீண்டும் மீண்டும் வாசிக்கத் தக்கவை.வாசிக்க வேண்டும்.இந்த நாவலையும் இன்னும் கூர்மையாக்கி பிரளயன் போன்றோர் நெறியாளுகையில் நாடகமாக்கலாமே!இது என் வேண்டு கோளும் கூட.இந்நாவலில் உரையாடல்கள் தனித்துப் பளிச்சிடும் வகையில் எழுத்துப் பாணியும் கட்டமைப்பும் இருந்திருப்பின் வாசிப்பு சுகம் கூடும்.எல்லோரும் படிக்க வேண்டிய நூல் இது.சுப்பாராவுக்கு வாழ்த்துக்கள்.
Reviews
There are no reviews yet.